
📢 புதுப்பிக்கப்பட்ட விளக்கக் குறிப்பு! – சிவில் சமூகத்தின் மீதான ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை: இது நிதி நடவடிக்கைப் பணிக்குழுவுடன் (FATF) எவ்வாறு தொடர்புபடுகிறது?
இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான வரைவு (பதிவு மற்றும் நிர்வகித்தல் ) சட்டம் குறித்த புதிய பிரிவொன்றை உள்ளடக்கும் வகையில் விளக்கக் குறிப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. வரைவு சட்டத்தின் முக்கியமான சில அம்சங்களை இந்தப் புதிய பிரிவு விளக்குவதுடன், பரந்த மற்றும் தண்டனை சார்ந்த அதிகாரங்களை, குறிப்பாக பொலிஸாருக்கு வழங்கும் பல ஏற்பாடுகள் FATF தரநிலைகளுக்கு எவ்வாறு முரண்படுகின்றன என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.
நிதி நடவடிக்கைப் பணிக்குழு (FATF) என்பது பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியைத் தடுப்பதற்கான (AML/CFT) சர்வதேச தரநிலைகளை வகுக்கும் அமைப்பாகும். ஒரு நாடு இத்தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், அது தரநிலைகளுக்கு இணங்காததாகவோ அல்லது பகுதியளவில் இணங்குவதாகவோ மதிப்பிடப்படலாம்; மேலும், அது “சாம்பல் பட்டியல்” அல்லது “கருப்புப் பட்டியலில்” சேர்க்கப்படலாம். இத்தகைய நிலைமைகள் வெளிநாட்டு முதலீடுகள் குறைவதற்கும், கடன் பெறுவதற்கான செலவுகள் அதிகரிப்பதற்கும், சர்வதேச வங்கிச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்படுவதற்கும் வழிவகுத்து, பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும்.
இலங்கையில், FATF தரநிலைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, சிவில் சமூகச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொதுப்படையான விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு நியாயப்படுத்தலாக முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் அமைப்புகள் உட்பட சிவில் சமூக அமைப்புகள் வங்கிக் கணக்குகள் மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வதைத் தடுக்கின்றன. இதனால், அவற்றின் பணிகள் சீர்குலைவதுடன், நலிவடைந்த சமூகங்களும் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், உள்ளூர் வங்கிகள் மற்றும் சிறிய தொழில்கள்மீதும் பாரிய நிருவாகச் சுமைகள் ஏற்படுகின்றன.
FATF தரநிலைகளுக்கு இணங்குவதாகக் கூறப்படும் காரணத்தை முன்வைத்து, இலங்கை அரசாங்கம் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான வரைவு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சட்டம், இலாப நோக்கற்ற செயல்பாட்டில் ஈடுபடும் ஐந்து பேருக்கும் மேற்பட்ட எந்தவொரு குழுவும் உட்பட, பரந்த அளவிலான அமைப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மீள்பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கோருகின்றது.
இது சிவில் சமூகச் செயல்பாடுகளில் தலையிடுவதற்கும் கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கும் அதிகாரம் கொண்ட தகுதிவாய்ந்த அதிகாரம் (Competent Authority) ஒன்றை உருவாக்குகின்றது. பிடியாணையின்றி இலாப நோக்கற்ற நிறுவனங்களின் வளாகங்களைச் சோதனையிடவும், நிறைவேற்றுக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவும், தேசியப் பாதுகாப்பு தொடர்பான தெளிவற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் செயல்பாடுகளை இடைநிறுத்தவும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
பதிவின் செல்லுபடியாகும் காலத்தை வெறும் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்துவது, நிறுவனங்களின் செயல்பாடுகளில் கடுமையான நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதுடன், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தையும் பலவீனப்படுத்துகின்றது. அத்துடன், இலாப நோக்கற்ற அமைப்புகள் (NPOs) தொடர்பான FATF இன் பரிந்துரை 8 இற்கும் முரணாக அமைகின்றது. இப்பரிந்துரை பரந்த, தன்னிச்சையான மற்றும் அடக்குமுறை சார்ந்த ஒழுங்குமுறைகளுக்குப் பதிலாக அபாய அடிப்படையிலான, இலக்கு நோக்கிய மற்றும் ஏற்புடையதான அளவிலான நடவடிக்கைகளை வலியுறுத்துகின்றது.
இலங்கை தற்போது தனது சட்டங்கள், கட்டமைப்புகள் மற்றும் நடைமுறைகள் FATF தரநிலைகளுக்கு இணங்குகின்றனவா என்பதை மதிப்பிடுவதற்கான FATF மதிப்பீட்டிற்கு உட்பட்டு வருகின்றது. எனவே, பரிந்துரை 8 உட்பட FATF தரநிலைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்குவதை உறுதிப்படுத்துவது இன்றியமையாததாகும்
இந்த விளக்கக் குறிப்பு, எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய உதாரணங்களின் ஊடாகப் பின்வரும் முக்கிய விடயங்களை விளக்குகிறது:
📌 FATF என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?
📌 இலங்கையின் AML/CFT சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் FATF வழிகாட்டுதல்களுக்கு எவ்வாறு முரணாகின்றன?
📌 FATF இன் பரிந்துரை 8 சிவில் சமூகத்தை எவ்வாறு பாதுகாக்கின்றது?
📌 FATF தரநிலைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் செலவுகள் மற்றும் பாதிப்புகள்
👉 முழுமையான விளக்கக் குறிப்பைப் படிக்க இங்கே சொடுக்கவும்: English | සිංහල | தமிழ்

இவ்வாண்டு இலங்கைக்கான பரஸ்பர மதிப்பீட்டிற்காக, இலங்கை சிவில் சமூக FATF வலையமைப்பு, நிதி நடவடிக்கைப் பணிக்குழுவிடம் (FATF) நிழல் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. இலாப நோக்கற்ற அமைப்புகள் (NPOs) துறையைப் பாதிக்கும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பான கரிசனைகளை இவ்வறிக்கை முன்வைக்கின்றது.
அடையாளம் காணப்பட்ட பயங்கரவாத நிதியுதவி ஆபத்துகளை எதிர்கொள்வதைத் தாண்டி, இலாப நோக்கற்ற அமைப்புகள் (NPOs) மீது அடக்குமுறை சார்ந்த சட்ட, ஒழுங்குமுறை மற்றும் நிருவாக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு FATF தரநிலைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை இவ்வறிக்கை ஆராய்கின்றது.
முக்கிய கரிசனைகள் பின்வருமாறு:
இந்த முன்னேற்றங்கள் குறிப்பாக FATF இன் பரிந்துரை 8 இன் பின்னணியில் முக்கியத்துவம் பெறுகின்றன. இலாப நோக்கற்ற அமைப்புகள் (NPOs) எதிர்கொள்ளக்கூடிய பயங்கரவாத நிதியுதவி ஆபத்துகளை நாடுகள் மதிப்பிட்டு, அடையாளங்கண்டு, புரிந்துகொண்டு, அவற்றை எதிர்கொள்வதற்காக அபாய அடிப்படையிலான, இலக்கு நோக்கிய மற்றும் ஏற்புடையதான அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பரிந்துரை வலியுறுத்துகின்றது.
FATF தரநிலைகள், இலாப நோக்கற்ற அமைப்புகள் துறைக்கு எதிராக தன்னிச்சையான மற்றும் பொதுப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ அல்லது சட்டபூர்வமான இலாப நோக்கற்ற அமைப்புகளின் செயல்பாடுகளைச் சீர்குலைப்பதற்கோ நோக்கம் கொண்டவை அல்ல.
எனவே, எதிர்பாராத விளைவுகளுக்கு எதிரான உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன், குறிப்பாக நிதிச் சேவைகளிலிருந்து விலக்கப்படுதல் மற்றும் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றைத் தடுக்கும் வகையில், இலங்கையின் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு (AML/CFT) கட்டமைப்பு உண்மையான அபாய அடிப்படையிலான, இலக்கு நோக்கிய மற்றும் ஏற்புடைய அளவில் அமைந்த அணுகுமுறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நிழல் அறிக்கை கோருகின்றது.
சட்டபூர்வமான சிவில் சமூகச் செயல்பாடுகளுக்கும், அடையாளம் காணப்பட்ட பயங்கரவாத நிதியுதவி அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்பாடுகளுக்கும் இடையில் தெளிவான வேறுபாட்டை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகின்றது.
பதிவிறக்கம் செய்யவும்: இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்காக FATF-க்கு சமர்ப்பிக்கப்பட்ட சிவில் சமூக நிழல் அறிக்கை – ஆகஸ்ட் 2026
👉இங்கே சொடுக்கவும்: සිංහල | தமிழ்
சிவில் சமூகத்தின் மீதான ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை: இது நிதி நடவடிக்கைப் பணிக்குழுவுடன் (FATF) எவ்வாறு தொடர்புபடுகிறது?
நிதி நடவடிக்கைப் பணிக்குழு (FATF) என்பது பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியைத் தடுப்பதற்கான (AML/CFT) கொள்கைகளுக்கான சர்வதேச தரநிலைகளை வகுக்கும் உலகளாவிய அமைப்பாகும். FATF தரநிலைகளைப் பின்பற்றத் தவறுவது ஒரு நாட்டுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, ஒரு நாடு “சாம்பல் பட்டியலில்” சேர்க்கப்படலாம்; இது அந்நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
இலங்கை அரசாங்கமானது, FATF தரநிலைகளைப் பயன்படுத்தி, அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGOs) மீது பொதுப்படையான மற்றும் தன்னிச்சையான கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இத்தகைய நடவடிக்கைகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் வங்கிச் சேவைகள் மற்றும் நிதி ஆதாரங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால், அவற்றின் சட்டபூர்வமான செயற்பாடுகள் பாதிக்கப்படுவதுடன், அவை சேவையாற்றும் நலிவடைந்த சமூகங்களும் பாதிக்கப்படுகின்றன. முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் மீது ஏற்புடையதல்லாத அளவிலான நிருவாகச் சுமைகளையும் ஏற்படுத்தும்.
இவ்வாண்டு இலங்கை, FATF இனால் மேற்கொள்ளப்படும் “பரஸ்பர மதிப்பீடு” (Mutual Evaluation) எனப்படும் மதிப்பீட்டுச் செயல்முறைக்கு உட்பட்டு வருவதால், இச்செயல்முறை குறித்தும், FATF தரநிலைகளுக்கு இணங்கும் வகையில் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியைத் தடுப்பதற்கான (AML/CFT) கொள்கைகளை முன்னெடுப்பதற்கு எவ்வாறு வலியுறுத்துவது என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.
இந்த விளக்கக் குறிப்பு பின்வரும் விடயங்களை விளக்குகிறது:
✅ FATF என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?
✅ இலங்கை அரசாங்கத்தின் (GoSL) பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு (AML/CFT) கொள்கைகள் FATF தரநிலைகளுக்கு முரணானவையா?
✅ FATF இன் பரிந்துரை 8 சிவில் சமூகத்தை எவ்வாறு பாதுகாக்கின்றது?
✅ FATF தரநிலைகளைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் இழப்புகளும் பாதிப்புகளும்
✅ மனித உரிமைத் தரநிலைகளுக்கு இணங்காததுடன், வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் மீது ஏற்புடையதல்லாத அளவிலான நிருவாகச் சுமைகளை ஏற்படுத்தும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள AML/CFT சட்டத் திருத்தங்கள்
✅ இதனை எதிர்கொள்ள நீங்கள் என்ன செய்ய முடியும்?
இங்கே பார்க்கவும்: விளக்கக் குறிப்பு! – சிவில் சமூகத்தின் மீதான ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை: இது நிதி நடவடிக்கைப் பணிக்குழுவுடன் எவ்வாறு தொடர்புபடுகிறது?
2025 செப்டம்பர் 1-2
தனது பேரண்டப் பொருளாதாரக் கொள்கை மற்றும் சமூக-பொருளாதார உரிமைகள் ஆய்வுப் புலமைப்பரிசில் (Macroeconomic Fellowship) திட்டத்தின் ஊடாகத் திரட்டப்பட்ட ஆய்வு முடிவுகளைப் பகிர்ந்துகொள்வதற்காக, NTT கடந்த ஆண்டு இரண்டு நாள் நிகழ்நிலை அமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்தது. இலங்கையின் பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் மக்களின் உரிமைகளுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பு குறித்து”(Intersections) எழும் கேள்விகளை எதிர்கொள்ள, பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை இந்த ஒன்றுகூடல் ஒரு ஆக்கபூர்வமான கலந்துரையாடல் தளத்தில் சங்கமிக்கச் செய்தது.
தொடர்ச்சியான பல அமர்வுகளின் ஊடாக, ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர்; அதனைத் தொடர்ந்து சிரேஷ்ட பொருளாதார நிபுணர்கள் மற்றும் களச் செயற்பாட்டாளர்களின் நுணுக்கமான ஆய்வுக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பிராந்திய ரீதியான வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள், நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் இடைவெளிகள், ஏற்றுமதித் துறையிலான தொழிலாளர் உரிமைகள், வரிச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்திய பால்நிலை ரீதியான தாக்கங்கள் (Gendered impacts) மற்றும் முறைசாரா வாழ்வாதாரங்கள் மீது வர்த்தகக் கொள்கைகள் செலுத்தும் செல்வாக்கு போன்ற தீர்மானமிக்க விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடல்களில் விரிவான தேடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
வெறும் ஆய்வு முடிவுகளை முன்வைக்கும் களமாக தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், தர்க்கரீதியான விவாதங்களுக்கும் விமர்சன ரீதியான ஈடுபாட்டிற்கும் வழிவகுக்கும் ஒரு உரையாடல் களமாகவே இந்த ஒன்றுகூடல் வடிவமைக்கப்பட்டது. பேரண்டப் பொருளாதாரத் தீர்மானங்கள், குறிப்பாகப் பல்வேறுபட்ட சமூகப் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களை எவ்வாறு தீர்மானிக்கின்றன என்பது குறித்து ஆழ்ந்து சிந்திப்பதற்குப் பங்கேற்பாளர்களுக்கு இதில் களம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
NTT தனது விரிவான உரையாடல்களை உருவாக்கும் பணிகளின் ஒரு அங்கமாக, மனித உரிமைகள் கட்டமைப்பிற்குள் வேரூன்றிய பொருளாதாரக் கொள்கை ஆய்வுகளின் தேவையை உணர்ந்து இந்தப் பேரண்டப் பொருளாதார ஆய்வுப் புலமைப்பரிசில் திட்டத்தைத் தொடங்கியது. கொள்கை விவாதங்கள் வெறும் தரவுகளுடன் நின்றுவிடாமல், மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்களையும் தேவைகளையும் பிரதிபலிப்பதை உறுதிப்படுத்துவதற்கு, முறையான சுயாதீன ஆய்வுகளைச் சமூக யதார்த்தங்களுடன் பிணைக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஒன்றுகூடல் மீளவும் உறுதிப்படுத்தியது.
ஆய்வுப் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் தொகுக்கப்பட்ட இந்தக் காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு வரும் வாரங்களில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்.
2025 ஜனவரி 24-25
வறுமை மற்றும் சமூக அந்தஸ்தின் அடிப்படையில் குற்றமாக்கப்படுதல் குறித்த முதலாவது தெற்காசிய மாநாடானது, தத்தமது சமூகங்களில் வறுமை, அந்தஸ்து மற்றும்/அல்லது அது தொடர்பான செயல்பாடுகளைக் குற்றமயமாக்குவதற்கு எதிராக தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் ஈடுபட்டுள்ள அமைப்புகளையும் ஆர்வலர்களையும் ஒன்றிணைத்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கலந்துரையாடல்களில், பங்கேற்பாளர்கள் பொதுவான சவால்களைப் புரிந்து கொண்டு, அவற்றை எதிர்கொள்வதற்கான உத்திகளைப் பகிர்ந்து கொண்டதோடு, குற்றமயமாக்கல் மற்றும் குற்றவியல் நீதி முறைமை குறித்த விவரிப்புகளை மறுவடிவமைப்பு செய்தனர்.
வறுமை மற்றும் சமூக அந்தஸ்தைக் குற்றமாக்குதலுக்கு எதிரான உலகளாவிய முயற்சியின் (The Global Campaign to Decriminalise Poverty and Status) அங்கத்தவர்களான ‘NTT’ மற்றும் International Legal Foundation (ILF) ஆகிய அமைப்புகள் இணைந்து, 2025 ஜனவரி 24-25 ஆகிய திகதிகளில் இலங்கையில் இந்த மாநாட்டை நடத்தின.வறுமை, சமூக அந்தஸ்து அல்லது சமூகச் செயற்பாடுகளின் அடிப்படையில் மக்களை இலக்கு வைக்கும் சட்டங்களை நீக்கவும், அத்தகைய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் தேவையான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவும் இந்த அமைப்புகளின் கூட்டணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
தற்போதைய சட்ட முறைமை எவ்வாறு விளிம்புநிலையில் மக்களை பாதுகாப்பதில் தோற்றுவிடுகிறது என்பதும், மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கங்கள் குற்றவியல் நீதி தொடர்பான சட்டத்தை எவ்வாறு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன என்பதும் இக்கலந்துரையாடல்களில் முக்கிய கருப்பொருள்களாக எழுந்தன . சிவில் சமூக அமைப்புகள் (CSOs) உட்பட ஒட்டுமொத்த சமூகமும், இந்த சட்ட முறைமையை விமர்சன ரீதியாக அணுகி, அதனைப் பொறுப்புக்கூறச் செய்வதற்கு மாறாக எவ்வாறு உடந்தையாகச் செயல்படுகின்றன என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் இக்கலந்துரையாடல்கள், வாழ்வாதாரத்திற்கான தற்காப்புச் செயல்களை குற்றமற்றதாக்குவதற்கும், இப்பிராந்தியத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலைச் சமூகங்களைப் பாதுகாப்பதற்கும் அவசியமான வெற்றிகரமான மாற்று உத்திகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள வழிவகுத்தன. அத்துடன், இது சார்ந்து இணைந்து செயல்படக்கூடிய சாத்தியமான களங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முழுமையான அறிக்கையைப் பார்வையிட:
வறுமை மற்றும் அந்தஸ்தை குற்றமற்றதாக்குதல்: மாநாட்டு அறிக்கை : Decriminalising Poverty and Status event report.pdf